தீபாவளி: ஒற்றுமை, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றை வலியுறுத்தி தேசிய தலைவர்களின் வாழ்த்துச் செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க (Anura Kumara Dissanayake) தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நவம்பர் 6 அன்று வெளியிடப்பட்ட தமது செய்தியில், தீபாவளி இருளுக்கு மேல் ஒளியினதும் அறியாமைக்கு மேல் அறிவினதும் வெற்றியைக் குறிக்கிறது என அவர் கூறினார்.
கிருஷ்ண பகவானின் நரகாசுரன் மீதான வெற்றியை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, நீதியின் முக்கியத்துவத்தையும் நன்மையின் வெற்றியையும் இப்பண்டிகை நினைவுபடுத்துவதாகக் கூறினார். வீடுகளில் விளக்கேற்றுவதைத் தாண்டி, மக்கள் இதயங்களில் அன்பு, இரக்கம், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தைப் பற்றவைப்பதே தீபாவளியின் உண்மை அர்த்தம் என அவர் வலியுறுத்தினார்.
வெறுப்புக்குப் பதிலாக கருணையையும், பிரிவுக்குப் பதிலாக சகவாழ்வையும், அநீதிக்குப் பதிலாக நீதியையும் தெரிவு செய்வதன் மூலம் மேலும் நியாயமான, இரக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பைப் புதுப்பிக்க இப்பண்டிகை வாய்ப்பளிக்கிறது என்றும், எல்லா மத மற்றும் பண்பாட்டு அடையாளங்களையும் மதித்து, அனைவரையும் சமத்துவத்துடனும் கண்ணியத்துடனும் நடத்தும் நாட்டைக் கட்டமைக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்றும் அவர் மீண்டும் உறுதிபடுத்தினார்.
பிரதமர் வைத்தியர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தமது செய்தியில், வெறுப்பு, பொறாமை மற்றும் அறியாமையை வென்று ஞானம், இரக்கம் மற்றும் ஒற்றுமையைத் தழுவுவதற்குத் தீபாவளி வாய்ப்பளிக்கிறது எனக் கூறினார். இலங்கையின் பல்வேறு சமூகங்களிடையே பரஸ்பர புரிதல், நல்லிணக்கம் மற்றும் ஐக்கியத்தைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டி, இன மற்றும் மத வேறுபாடுகளைக் கடந்து ஒரே நாடாக முன்னேற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) விடுத்த செய்தியில், நன்மை தீமையையும் ஒளி இருளையும் வெல்லும் தீபாவளியின் தத்துவச் செய்தி, தற்போதைய சமூக-பொருளாதாரச் சவால்களின் மத்தியில் இலங்கைக்குக் குறிப்பிடத்தக்க வகையில் தொடர்புடையது எனக் கூறினார். அடக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராக நிற்பதே இப்பண்டிகையின் ஆழமான அர்த்தம் எனக் கூறிய அவர், மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கும் இத்தத்துவம் வழிநடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
வெளிவிவகார, வெளிநாட்டு தொழில் மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தமது வாழ்த்தில், தீபாவளி ஒரே நாட்டிற்கோ தேசத்திற்கோ மதத்திற்கோ மட்டுப்படுத்தப்பட்டதல்ல; ஒளியின் வெற்றியையும் மனிதநேயத்தின் நன்மையையும் அது கொண்டாடுகிறது எனக் கூறினார். யாழ்ப்பானத்தின் ஆலயங்களிலும் கொழும்பின் வீடுகளிலும் துபாய், இலண்டன், டொரொன்டோ உட்பட்ட வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் இல்லங்களிலும் எற்றப்படும் விளக்குகள் பொதுவான உணர்வையும் தொடர்பையும் பிரதிபலிக்கின்றன என அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் நாட்டைத் தொடர்ந்தும் வலுப்படுத்துகின்றன என்றும் அவர்களது தாய்நாட்டின் மீதான அன்பு உறுதியாக உள்ளது என்றும் அமைச்சர் அங்கீகரித்தார். தீபாவளியின் போது எற்றப்படும் விளக்குகள் வீடுகளை மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள அயலார் மற்றும் சமூகங்களின் இதயங்களிலிருந்தும் இருளை அகற்றட்டும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.


