கடத்தப்பட்ட மெக்சிகோ (Mexico) எல்லை நகர மேயர் உயிருடன் மீட்கப்பட்டார்

மெக்சிகோவின் (Mexico) எல்லை நகரமான ரியோ பிராவோவின் (Rio Bravo) மேயர் மிகுவேல் ஆங்கெல் அல்மராஸ் (Miguel Angel Almaraz), வடக்கு மெக்சிகோவில் வன்முறைக்குப் பெயர் பெற்ற சக்கதெக்காஸ் (Zacatecas) மாநிலத்தில் கடத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர் உயிருடன் கண்டெடுக்கப்பட்டார்.
குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் சனிக்கிழமை பயணம் செய்துகொண்டிருந்தபோது, சக்கதெக்காஸ் மற்றும் சான் லூயிஸ் பொத்தோசி (San Luis Potosi) மாநிலங்களுக்கு இடையிலான பிரதேசத்தில் ஆயுதம் தாங்கியோர் அவரது மகிழுந்தை மறித்து அவரை மட்டும் கடத்திச் சென்றனர்; ஏனையோரை விடுதலை செய்தனர். உறவினர்கள் அருகிலுள்ள நகரொன்றை அடைந்து மாநிலப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குத் தகவல் தெரிவித்தனர். ஞாயிறன்று கடத்தல்காரர்களே அவரை விடுதலை செய்ததாகக் கூட்டரசு (federal) அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 110,000 மக்கள் வாழும் ரியோ பிராவோ, அமெரிக்காவின் (United States) டெக்சாஸ் (Texas) மாநில எல்லையிலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் தமாவுலிப்பாஸ் (Tamaulipas) மாநிலத்தில் அமைந்துள்ளது. பழமைவாத தேசிய செயல் கட்சியை (National Action Party) சேர்ந்த அல்மராஸ், 2015 இல் பண மோசடிக் குற்றச்சாட்டுகளிலிருந்து ஆறு வருடச் சிறைக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.
அவர் ஏன் கடத்தப்பட்டார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. யார் தொடர்புடையவர்கள் என்பது உட்பட விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜலிஸ்கோ புதிய தலைமுறைக் கும்பல் (Jalisco New Generation Cartel) மற்றும் சினலோவா கும்பல் (Sinaloa Cartel) போன்ற போதைக் குழுக்களின் செயற்பாடுகளுக்குச் சக்கதெக்காஸ் அறியப்படுகிறது; இரு குழுக்களும் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகின்றன. கடந்த ஆகஸ்டில் அம்மாநிலத்தின் ஓஹோ கலியென்டே (Ojo Caliente) நகர காவல்துறைத் தலைமையகத்துக்கு வெளியே மகிழுந்துக் குண்டு வெடித்து 11 பேர் காயமடைந்து சுமார் 30 வீடுகள் பாதிப்படைந்தமை குறிப்பிடத்தக்கது.



