புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (anti-terrorism law) சிறுபான்மைச் சமூகத்தைப் பாதிக்கும் - மட்டக்களப்பு எம்.பி எச்சரிக்கை

அரசால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டத்தின் (anti-terrorism law) மூலம், சிறுபான்மைச் சமூகத்தினரையும் மாற்றுக் கருத்துடையோரையும் பயங்கரவாதம் என்ற சாயப்பூசலில் கைது செய்ய அரசாங்கம் திட்டமிடுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் (Ilaiyathambi Sreenath) எச்சரித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான அமைதியான போராட்டங்கள், கருத்துச் சுதந்திரம், சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்திகளைப் பயங்கரவாதம் அல்லது தூண்டுதல் எனக் குற்றம்சாட்டி, தன்னிச்சையாகக் கைது செய்யவும் இச்சட்டம் வாய்ப்பளிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய சட்டங்கள் குறித்து மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (07.11.2026) மட்டக்களப்பில் (Batticaloa) உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சிறுபான்மையினர் அனுஸ்டிக்கும் மாவீரர் நினைவு நாள், முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள், பாதிக்கப்பட்டோருக்கான நீதி கோரும் போராட்டங்கள், நில ஆக்கிரமிப்பு, கலாச்சாரம், மொழி மற்றும் தொல்லியல் திணைக்களம் (Department of Archaeology) தொடர்பான போராட்டங்களை இலகுவாகத் தடை செய்யவே இச்சட்டம் அரசால் சிந்திக்கப்படுவதாகவும், ஊடகச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இவற்றுக்கு எதிராக நாடாளுமன்றம், சட்டத்துறை, சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் (trade unions) மூலம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்றும், இச்சட்டம் நிறைவேறினால் அது சுருக்குக் கயிறாக மாறக்கூடும் என்பதால் ஆரம்பத்திலேயே அதற்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



