தையிட்டியில் (Thaiyiddy) அனுமதியின்றி அமைக்கப்பட்ட விகாரைக்கு (vihara) எதிராக காணி உரிமையாளர்கள் மழையிலும் போராட்டம்

யாழ்ப்பாணம் (Jaffna), தையிட்டி பகுதியில் (Thaiyiddy) தனியார் காணிகளை அடாத்தாகக் கையகப்படுத்தி, எவ்வித அனுமதிகளும் இன்றி அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு (vihara) எதிராக இன்று (09.11.2026) கடும் மழைக்கு மத்தியிலும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த விகாரையை அகற்றி, காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் மீண்டும் கையளிக்கக் கோரி நீண்டகாலமாக அப்பகுதி மக்கள் போராட்டம் முன்னெடுத்து வருகின்றனர். தங்களது மூதாதையர் காணிகள் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டமைக்கு எதிராக, உரிமையாளர்களும் அப்பகுதி மக்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களது குரலை எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த விகாரையில் இன்று மிகப் பெரியளவில் மதச் சடங்கு ஒன்று நடைபெற்றதுடன், அதற்காகத் தென்னிலங்கையிலிருந்து நூற்றுக்கணக்கான பௌத்தர்கள் அழைத்துவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பகுதி மக்களிடையே கலவரமான மனநிலை ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களுடன், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) உள்ளிட்ட அரசியல்வாதிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மழை நிலைமைக்கு மத்தியிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்ற இந்தப் போராட்டம், காணி உரிமைப் பிரச்சினையை மீண்டும் களத்திற்குக் கொண்டுவந்துள்ளது. காணிகளை உரிமையாளர்களிடம் திருப்பி வழங்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும், சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளையும் ஆராய்ந்து வருவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.



